முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் அவர்களது மறைவு தமிழினத்துக்கு பெரும் இழப்பாகும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

NEW YORK, UNITED STATES OF AMERICA, September 20, 2018 /EINPresswire.com/ —

முதுபெரும் தமிழறிஞரும், தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் தலைவராக செயலாற்றியவரும். தமிழுரிமைக் கூட்டமைப்பின் தலைவருமான புலவர் கி.த.பச்சையப்பனார் மறைந்தார் என்கிற செய்தி உலகெங்கும் வாழ் தமிழர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புலவர் கி.த.பச்சையப்பனார் மறைவு குறித்து, பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழாசிரியர், புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர், மொழியறிஞர், நாளிதழ் ஆசிரியர், தமிழ்மொழிக்கும், இன விடுதலைக்காகவும் செற்;பட்டு வந்தமை மட்டுமல்லாது, தமிழ் மறவர் என பன்முகங்கொண்ட அவரது ஆளுமை வியக்கத்தக்கதாகும்.

தமிழறிஞராக தொண்டாற்றுவது என்பதற்கு அப்பால், தமிழ்மொழி, இனம், நாட்டு உரிமைகளுக்காகத் தொடர்ந்து முன்களத்தில் நின்று போராடிவந்த அவரது மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்.

ஈழத்தமிழர்களின் உரிமை வேட்கைக்கான போராட்டத்திற்கு தனது முழுமையான தோழமையை வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் நடத்தப்பெற்ற அனைத்து அறப்போராட்டங்களிலும் அனைவருடனும் சேர்ந்தியங்கிய அவரது நினைவைப் போற்றுகின்றோம்.

தமிழைச் செம்மொழி ஆக்குவதற்காக 100 தமிழறிஞர்களுடன் அவர் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றது முதல், அறிவியல் வளர்ச்சிக்குத் தக்கவாறு தமிழில் புதிய சொற்களை உருவாக்குதல், மின்ணணு கருவிகளில் தமிழை உள்ளீடு செய்தல் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பணி தமிழ் உள்ளவரை தமிழர்களால் நினைவுகூறப்படும்.

அன்னாரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருடனும், தமிழ்நாட்டு மக்களுடனும் நாங்களும் இணைகின்றோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact: Phone: +91-975-152-4004
Email: mathuriniyan@gmail.com

நாதம் ஊடகசேவை

Transnational Government of Tamil Eelam (TGTE)
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
+91-975-152-4004
email us here


Source: EIN Presswire